தொடர்ந்து 53 மணி நேரம் யோகா : காஞ்சிபுரம் பெண் உலக சாதனை
காஞ்சிபுரத்தில் பெண் ஒருவர் தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா. பொதுச்சபை, ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. கடந்த ஆண்டு, முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
2-வது ஆண்டாக இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும், இந்தியா உள்பட 135க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச யோகா தினம் முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டில்லி, சென்னை, மும்பை, பெங்களூரூ உள்ளிட்ட பகுதிகளில் யோகா சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் பெண் ஒருவர் தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார். காஞ்சிபுரத்தை சேர்ந்த கே.பி ரஞ்சனா (34) என்ற வழக்குரைஞர், தொடர்ந்து 53 மணி நேரம் யோகா ஆசானங்களை செய்து அசத்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக, கடந்த 2015ஆம் ஆண்டு நேபாளத்தை சேர்ந்த உத்தம் முக்தன் என்பவர் தொடர்ந்து 50 மணி நேரம் யோகா செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சனா ஒரு மணி நேரத்திற்கு 5 நிமிட இடைவெளியில் 600 யோகா ஆசானங்களை செய்துள்ளார். ஜூன் 19ஆம் தேதி யோகாசனம் செய்ய தொடங்கிய ரஞ்சனா, இன்று மதியம் 3 மணியளவில் தன்னுடைய பயிற்சியை நிறைவு செய்துள்ளார்.