கமல்ஹாசனை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. எம்பி ஆகிறார் உலக நாயகன்..!
மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனை அமைச்சர் சேகர்பாபு சந்தித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் ஆதரவளித்து பிரச்சாரம் செய்த நிலையில், கோவை தொகுதி கமல்ஹாசனுக்காக கேட்கப்பட்டதாகவும், ஆனால் மாநிலங்களவை பதவி கொடுக்க திமுக சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், வரும் ஜூன் மாதத்துடன் வைகோ, திருச்சி சிவா ஆகிய இரண்டு திமுக மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலமும், அதிமுக எம்பி தம்பிதுரை, பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலமும் முடிவடைகின்றன. இந்த நிலையில், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக கமல்ஹாசனை தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் கமல்ஹாசனை அமைச்சர் சேகர்பாபு இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது, கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், 2026 சட்டமன்ற தேர்தலின்போது கூட்டணி குறித்தும் இருவரும் பேசியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், அதிமுக கூட்டணியின் சார்பில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
Edited by Mahendran