செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (10:31 IST)

மாலை நேரக் கச்சேரியில் இன்றைய பாடகர் யார்? ஆளும் கட்சியை விமர்சித்த நேரு!

அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு.
 
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1540 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்படவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
 
இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் “எதிர்கட்சி தலைவர் இக்கட்டான சூழலிலும் மலிவான அரசியல் செய்கிறார்” என கூறினார். இது திமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
 
அமைச்சர் விஜயபாஸ்கரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு. அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 
 
மாலை நேரக் கச்சேரியில் இன்றைய பாடகர் யார் என்பது போல, கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் அறிவிப்பு என்ற பெயரில், அதிமுகவினர் போட்டிப் போட்டுக் கொண்டு விளம்பரம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர் என இந்த விளம்பர வேட்கை தொடர்கிறது. 
கொரோனா வைரஸ் தனது வேட்டையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மூன்று நாளில் கொரோனா ஒழிந்துவிடும் என டாக்டர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நான்காவது நாளிலும், கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை கூடிக் கொண்டிருப்பதையும், உயிரிழப்பும் ஏற்பட்டிருப்பதையும், மாலை நேரக் கச்சேரியின் பாகவதரான சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியிருக்கிறார். 
 
கொரோனா நோய்த் தொற்று அபாயத்தைத் தொடக்கம் முதலே வலியுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்தக் கோரி வருபவர் திமுக தலைவர் ஸ்டாலின் எனவும் குறிப்பிட்டுள்ளார்.