ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (11:58 IST)

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது..! அதிர்ச்சியில் எடப்பாடியார் அணி! – நீதிமன்றம் தீர்ப்பு!

அதிமுக பொதுக்குழு கூட்டம் குறித்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் பொதுக்குழு கூட்ட முடிவுகள் செல்லாது என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுக கட்சியில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே ஒற்றை தலைமை குறித்த மோதல் எழுந்த நிலையில் கடந்த ஜூலை 11ம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.

ஆனால் இந்த பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகள்படி நடத்தப்படவில்லை என ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று அதன் தீர்ப்புகள் வெளியாகியுள்ளது.

அதன்படி ஜூலை 11ம் தேதி அதிமுக நடத்திய பொதுக்குழு கூட்டம் மற்றும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை ஜூன் 23ம் தேதி நிலைமையே தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும், பொதுக்குழு கூட்டத்தை ஆண்டுக்கு ஒருமுறை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.