வெள்ளி, 7 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Annakannan
Last Updated : சனி, 28 ஜூன் 2014 (18:05 IST)

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கு வலைத்தளம் - ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, 27.6.2014 அன்று தலைமைச் செயலகத்தில், மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கென 4 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட www.ulagatamilsangam.org என்ற வலைத் தளத்தைத் தொடங்கி வைத்தார். 

 
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் மதுரையில் 1981ஆம் ஆண்டு ஜனவரித் திங்களில் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது அறிவிக்கப்பட்டு, 14.4.1986 சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கென 1982ஆம் ஆண்டு மதுரை, தல்லாகுளத்தில் 14.15 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
 
தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, 2011ஆம் ஆண்டு மூன்றாம் முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தைப் புதுப் பொலிவோடும், புதிய உத்வேகத்தோடும் செயல்படுத்த ஆணையிட்டார். 
 

அதன்படி, மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்திற்கெனத் தனி அலுவலர் அலுவலகம் தோற்றுவிக்கப்பட்டதோடு, துணை விதிகள் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு சங்கப் பதிவு சட்டத்தின் கீழ் மதுரையில் 13.12.2012ஆம் நாளன்று பதிவு செய்யப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்கத்தைச் சிறப்புடன் நிருவகிக்கத் தனி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் உருவாக்கப்பட்டு உலகத் தமிழ்ச் சங்கப் பணிகள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன. உலகத் தமிழ்ச் சங்கத்திற்குப் பெருந்திட்ட வளாகம் கட்ட 25 கோடி ரூபாயும், ஊதியம் மற்றும் திட்டப் பணிகளுக்கென மானியமாக இதுவரை 1 கோடியே 43 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. 
 
இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா அவர்களின் ஆணைப்படி, உலகத் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றிடவும், உலகத் தமிழ்ச் சங்கத்தின் செயற்பாடுகளை உலகத்தில் உள்ள அனைவரும் அறிந்துகொள்ளும் வகையிலும் 4 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் செலவில் உலகத் தமிழ்ச் சங்கத்திற்கென www.ulagatamilsangam.org என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள வலைத்தளத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். 
 
இந்த வலைத்தளத்தில், உலகத் தமிழ்ச் சங்கத் துணை விதிகள்; உலகத் தமிழ்ச் சங்கத் திட்டங்கள்; முதலமைச்சர் ஜெயலலிதாவின் அமுதமொழிகள் மற்றும் ஜெயலலிதா தலைமையிலான அரசின் தமிழ் வளர்ச்சி குறித்த சாதனைகள்; இதுவரை நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகள் குறித்த விவரங்கள்; சங்கத் தமிழ் நிகழ்வுகள்; பழந்தமிழ்ச் சங்கங்கள் பற்றிய குறிப்புகள்; பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள உலகத் தமிழ் அமைப்புகள்; இந்தியாவில் உள்ள வெளிமாநிலத் தமிழ் அமைப்புகள்; தமிழ் வளர்ச்சித் துறை வலைத்தள இணைப்பு வசதி ஆகியவை இடம் பெற்றுள்ளன. 
 
இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசு ஆலோசகர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., (ஓய்வு), தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் முனைவர் மூ. இராசாராம் இ.ஆ.ப, உலகத் தமிழ்ச் சங்கத்தின் தனி அலுவலர் (பொறுப்பு) முனைவர் க. பசும்பொன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.