1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2016 (15:21 IST)

சென்னையில் நடந்த வருமான வரி சோதனை - ரூ.70 கோடி புதிய 2000 பணம் மீட்பு

சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.70 கோடி வரை புதிய 2000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
மக்களிடம் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8ம் தேதி அறிவித்தார். 
 
இதனால் கருப்பு பணம் வைத்திருந்தவர்கள் தங்கத்தில் முதலீடு செய்தனர். மேலும், வங்கி அதிகாரிகள் மற்றும் பணத்தை மாற்றித்தரும் ஏஜெண்டுகள் மூலம் தங்களிடம் இருந்த கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றும் முயற்சியில் இறங்கினர்.
 
எனவே, கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த பல்வேறு விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்கும் வகையில், வருமான வரித்துறை அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், சென்னையில் தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட 8 இடங்களில் சில தொழிலதிபர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ரூ.90 கோடி கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியுள்ளது. அதில் முக்கியமாக, ரூ.70 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகளாக இருந்துள்ளது. மேலும், 100 கிலோ தங்கங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
வெறும் 2000 ரூபாய்க்கு ஏ.டி.எம். வாசலில் கால் கடுக்கும் நிற்கிறார்கள் சாமானியர்கள். ஆனால், ரூ.70 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டு கட்டுகளாக இருந்தது எப்படி? என்ற கேள்வி எழாமல் இல்லை.
 
ஆனால் யார் அதற்கு பதில் சொல்லப் போகிறார்?