மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை வழக்கு தொடர்பாக சிறுவன் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைச் செயலாளராக இருந்து வந்தார். (16.07.2024) நேற்று அதிகாலை 6.30 மணியளவில் வழக்கம் போல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே உள்ள வல்லபாய் சாலையில் பாலசுப்ரமணியன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது இவரைப் பின் தொடர்ந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாலசுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து 4 பேர் கொண்ட மர்ம கும்பலை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரடி கண்காணிப்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், மகாலிங்கம் என்பவருக்கும் அவரது தம்பி மருமகன் பாண்டியராஜன் என்பவருக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்கிடையில் பாண்டிய ராஜனின் சகோதரரும் நாதக நிர்வாகியாக செயல்பட்டு வந்தவருமான பாலசுப்ரமணியன், மகாலிங்கத்திடம் பிரச்சனை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இப்பிரச்சனைக்கு சுமுகமாகத் தீர்வு காணும் விதமாக பாண்டியராஜனின் மகள் பிரியா என்பவரை மகாலிங்கத்தின் மகன் அழகுவிஜய் என்பவருக்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர். திருமணமான பிரியா அழகுவிஜய் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 2024-ல் பாண்டியராஜன் மற்றும் மாகலிங்கத்திடம் மீண்டும் சொத்துப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாண்டியராஜன் அளித்த புகாரின்படி மகாலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த மகாலிங்கத்தை, பாண்டியராஜனும்- பாலசுப்பிரமணியனும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனை அறிந்து கொண்ட மாகலிங்கம், தன்னிடம் லோடு மேன்களாக வேலை பணியாற்றி வந்த பரத், கோகுலகண்ணன், பென்னி மற்றும் ஒரு சிறுவன் என 4 பேரை கொண்ட கும்பலை வைத்து பாலமுருகனை வெட்டிப் படுகொலை செய்துள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கொலையானது இருதரப்பினருக்குமிடையே திருமணத்தில் ஏற்பட்ட பிரச்சனையாலும், அவர்களுக்கிடையே உள்ள சொத்தை பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அரங்கேறியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த மாகலிங்கம் மற்றும் மகன் அழகு விஜய் ஆகியோர் குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.