வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2023 (08:26 IST)

வெள்ள நீரை அகற்ற நெய்வேலி NLC –ல் இருந்து வந்துகொண்டிருக்கும் ராட்சச பம்புகள் !

கோப்பு படம்

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில், நேற்று முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து கடுமையான வெள்ள சேதத்தை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட 40 செமீ மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்துள்ளன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நள்ளிரவில் இருந்து மழை குறைந்துள்ள நிலையில் மீட்புப் பணிகளை சென்னை மாநகராட்சி துரிதப்படுத்தி வருகிறது. இப்போது பிரதான சாலைகளில் விழுந்திருந்த மரங்கள் முழுவதும் அகற்றப்பட்டு விட்டதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதுபோல உள் பகுதிகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணி இன்று காலை செய்து முடிக்கப்படும் என அறிவித்துள்ளது.

தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நெய்வேலி NLC ல் இருந்து ராட்சச பம்புகள் வந்துகொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பம்புகளால் குறைவான நேரத்தில் கூடுதல் தண்ணீரை வெளியேற்ற முடியும் என கூறப்படுகிறது. பம்புகள் வந்ததும் தாழ்வான பகுதிகளில் இருக்கும் நீரை அகற்றும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.