ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2016 (11:53 IST)

ராம்குமாரை நிரந்தரமாக சிறையில் வைக்க திட்டம் தீட்டிய எச்.ராஜா: ராமராஜ் புகார்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை நிரந்தரமாக சிறையில் அடைக்க பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திட்டம் தீட்டியதாக ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.


 
 
சில தினங்களுக்கு முன்னர் ராம்குமாருக்கு ஜாமீன் வழங்க வேண்டி வக்கீல் கிருஷ்ணமூர்த்தி களம் இறங்கி வாதாடினார். இதனையடுத்து இந்த ஜாமீன் மனு ராம்குமாரின் ஒப்புதல் இல்லாமல், அவரது குடும்பத்தாரின் அனுமதியில்லாமல் தாக்கல் செய்யப்பட்டது என்பது தெரியவந்தது.
 
இதனையடுத்து நேற்று திடீரென வக்கீல் கிருஷ்ணமூர்த்தி இந்த வழக்கில் தான் வாதாட போவதில்லை, தனக்கு ஏற்கனவே நிறைய வேலை பளு இருக்கிறது என பின்வாங்கினார்.
 
இந்நிலையில், செங்கோட்டையில் ராம்குமாரின் பெற்றோரை சந்திக்க சென்ற வழக்கறிஞர் ராமராஜ், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஏற்பாடு செய்த ஆள் என்றார்.
 
மேலும், இந்த மனுவை தாக்கல் செய்தால் கீழ் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்படும். பின்னர் மேல் நீதிமன்றத்துக்கு போனால், இந்த வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு வரும், எனவே அதனை பயன்படுத்தி இந்த வழக்கில் ராம்குமாரை நிரந்தரமாக சிறையில் அடைக்க திட்டமிட்டுதான் வக்கீல் கிருஷ்ணமூர்த்தியை ஜாமீன் மனு தாக்கல் செய்ய எச்.ராஜா கூறினார் என குற்றம் சாட்டியுள்ளார்.