செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: செவ்வாய், 26 மே 2015 (22:49 IST)

எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பை பெறாமல் சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுவதா? பாஜக மீது ஜி.கே.வாசன் காட்டம்

இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு, நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் போது மக்களைச் சந்தித்த நரேந்திர மோடி, இந்தியாவில் மிகப் பெரிய மாற்றம் கொண்டு வருவேன் என கூறி ஆட்சிக்கு வந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்தது முதலே மாற்றத்திற்கு பதிலாக ஏமாற்றத்தையே மக்களுக்கு அளித்துள்ளார்.
 
ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 12 மாதங்களில் 11 அவசரச் சட்டங்களை கொண்டுவந்து ஜனநாயக மரபை கடைப்பிடிக்கத் தவறிவிட்டார்.
 
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவோம் என்று கூறிய மத்திய அரசு அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கொண்டுவந்து விவசாயிகளுக்கு எதிராகவும், பெரு முதலாளிகளுக்கு ஆதரவாகவும் செயல்படுகிறது.
 
விலைவாசியை குறைப்போம் என்று கூறிவிட்டு, அதற்கு நேர்மாறாக பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்தி, கலால் வரியையும் உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றியுள்ளனர்.
 
சிறுபான்மை மக்களுக்கு எதிராக மதவாத சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதை கண்டு கொள்ளாமல் உள்ளனர். காஷ்மீரில் அரசியல் லாபத்திற்காகவும், கூட்டணிக்காகவும் பிரிவினைவாதிகள் தலைதூக்கியிருப்பதை மத்திய பாஜக அரசு வேடிக்கைப்பார்க்கிறது. மாவோயிஸ்ட்கள், நக்சலைட்கள் பல மாநிலங்களில் தலை தூக்கியிருப்பதை ஒடுக்குவதற்கு, மாநில அரசோடு இணைந்து செயல்பட ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை.
 
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்போம் என்றனர். ஆட்சிக்கு வந்த பிறகு மீனவர் பிரச்சனைகளில் மெத்தனப் போக்கையே கடைபிடிக்கின்றனர்.
 
இந்தியாவில் 75 சதவிகிதம் பேர் கிராமங்களில் வாழ்கிறார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்காக கொண்டுவரப்பட்ட கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை முடக்கும் வகையிலேயே மத்திய அரசு செயல்படுகிறது. மகளிர் முன்னேற்றம் காண கொண்டுவரப்பட்ட சுய உதவிக்குழு திட்டதிற்கு போதுமான நிதி ஒதுக்காமல் அதனையும் கிடப்பில் போட நினைக்கிறார்கள். 
 
முக்கிய சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேறும் போது பிரதமர் கலந்து கொள்ளவில்லை. எதிர் கட்சிகளின் ஒத்துழைப்பை பெறாமல் சட்டங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுகிறார்கள். 
 
ஏற்கனவே, நடைமுறையில் இருந்த பல்வேறு திட்டங்களின் பெயர்களை மாற்றுவதிலும் அதனை முடக்கவும் அக்கறை காட்டும் பாஜக அரசு, பொது மக்களின் முன்னேற்றத்திற்கான எந்த முக்கிய புதிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை.
 
பாஜகவினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கூறிய வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறக்க விட்டு, ஆட்சி மாற்றம் என்ற பெயரில் மக்களுக்கு ஏமாற்றத்தையும், சுமையையும் கொடுத்துள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார்.