ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2024 (09:28 IST)

மினி பஸ் சேவை விரிவாக்கம்! சென்னையில் எந்தெந்த ஏரியாக்களில் அனுமதி?

Mini Bus
தமிழ்நாடு முழுவதும் மினி பஸ் சேவைகளுக்கான தூரத்தை விரிவுப்படுத்தல் மற்றும் சென்னையில் மினி பஸ் சேவைகளுக்கான அனுமதி குறித்த புதிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.



தமிழ்நாடு முழுவதும் பல நகரங்கள் – கிராமங்களை இணைக்கும் பயண வாகனமாக மினி பஸ் சேவைகள் இருந்து வருகிறது. பல கிராமங்களுக்கு செல்வோரும் மினி பஸ்களையும், அதில் ஒலிக்கும் பாடல்களையும் மறந்திருக்க முடியாது. தற்போது சென்னை உள்ளிட்ட சில பெருநகரங்களில் மினி பஸ் சேவை இல்லை. கிராமங்களுக்கு செல்லும் மினி பஸ்களுக்கும் பயண தூரம் 16 முதல் 20 கி.மீ தூரம் என்பது வரையறுக்கப்பட்ட அதிகபட்ச தொலைவாக உள்ளது.

இந்நிலையில் மினி பஸ்களின் பயண தூரத்தை 25 கி.மீ ஆக விரிவுப்படுத்தவும், சென்னையின் சில பகுதிகளில் மினி பஸ் சேவையை அறிமுகப்படுத்தவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னையின் புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மினி பஸ் சேவைகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட உள்ளது.


சென்னையின் முக்கிய பகுதிகளான தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே மெட்ரோ, பேருந்து என பல போக்குவரத்து வசதிகள் உள்ளதால் இப்பகுதிகளில் மினி பஸ்களை இயக்க அனுமதி இல்லை. மேலும் எந்தெந்த பகுதிகளில் மினி பஸ் சேவை வழங்கலாம் என மண்டல ஆர்டிஓக்கள் முடிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து மினி பஸ்களிலும் ஜிபிஎஸ் பொருத்த வேண்டும் என்றும், இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை ஜூலை 14ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள்தொகைக்கு ஏற்ப போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத பகுதிகளில் மினி பஸ்களை இயக்குவது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.

Edit by Prasanth.K