சென்னை டூ தூத்துக்குடி! திருமணத்திற்கு சென்ற மணமக்கள் மருத்துவமனையில் அனுமதி!
திருமணம் செய்து கொள்வதற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி வந்த மணமக்கள் உள்ளிட்ட 35 பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி எட்டயபுரத்தை சேர்ந்த சில சென்னை வில்லிவாக்கத்தில் தங்கி பணி புரிந்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமணம் நடத்த முடிவானது. அதை தொடர்ந்து அவர்கள் நாளை மறுநாள் எட்டயபுரத்தில் திருமணம் செய்து கொள்ள இருப்பதால் உறவினர்கள் சகிதம் சென்னையிலிருந்து அனுமதி பெற்று ஆம்னி வேனில் புறப்பட்டுள்ளனர்.
தற்போது சென்னையில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ளதால் அங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்பவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் எட்டயபுரம் சோதனை சாவடியை அடைந்த அவர்கள் சென்னையிலிருந்து வருவது தெரிய வந்ததால் அவர்கள் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் எட்டயபுரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட உறவினரை பார்க்க சென்னையிலிருந்து வந்த 8 பேர் மருத்துவ பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.