என்ஜினீயரிங் கல்லூரிகள் இழுத்து மூட முடிவு – பல்கலைகழகத்துக்கு விண்ணப்பம்
என்ஜினீயரிங் படிப்பின் மீதான மோகம் மக்களிடையே குறைந்துள்ள நிலையில் என்ஜினீயரிங் கல்லூரிகள் பல கல்லூரியை மூடுவதற்கு விண்ணப்பித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகள் என்றாலே தனி மவுசு இருந்த காலம் முடிந்து, தற்போது பொறியியல் என்றாலே அலர்ஜியாக பார்க்கக் கூடியா நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கணக்கற்று தொடங்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளும், அதில் படித்து வேலைவாய்ப்பு கிடைக்காமல் போன பல இளைஞர்களும் ஏற்படுத்திய தாக்கத்தால் தற்போது பொறியியல் படிப்பு மீதான் மோகம் குறைந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் பல பொறியியல் கல்லூரிகளில் மொத்த மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்களில் கால்வாசிக் கூட நிரம்பவில்லை. இதனால் பல பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதற்கு தயாராக இருக்கின்றன. இந்நிலையில் 2020 – 2021 கல்வியாண்டுக்கான அங்கீகாரம், இணைப்பு அந்தஸ்து மற்றும் மாணவர் சேர்க்கைக்காக புதுப்பிக்குமாறு அண்ணா பல்கலைகழகம் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.
தமிழகத்தில் உள்ள 557 பொறியியல் கல்லூரிகளில் 537 கல்லூரிகள் மட்டுமே கல்வியாண்டு அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளன. மீதமுள்ள 20 கல்லூரிகளில் 11 கல்லூரிகள் வரும் கல்வியாண்டு முதல் தங்கள் கல்லூரிகளை மூடுவதற்கு உத்தெசித்துள்ளதாகவும், இதுகுறித்த விண்ணப்பத்தை பல்கலைகழகத்திற்கு அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.