புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 நவம்பர் 2021 (11:40 IST)

இந்த அரசாங்கத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை! – எடப்பாடியார் ட்வீட்!

திருச்சி காவல் சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை அருகே கீரனூர் அருகே ஆடு திருடும் கும்பல் ஒன்றை விரட்டி சென்றுள்ளார்.

அப்போது அந்த திருட்டு கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளது. இதனால் பூமிநாதன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி “சமூக விரோதிகளால் திருச்சி,நவல்பட்டு காவல்நிலைய SI திரு.பூமிநாதன் சமூக விரோதிகளால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன், அரசின் சார்பாக 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் “விரைவில் கொலையாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்று தருமாறு கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் இந்த விடியா அரசில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை என்பது நிதர்சனம் ஆகியிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.