செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 30 ஜூலை 2018 (10:49 IST)

கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர்...

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் கருணாநிதியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று நலம் விசாரித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் சற்று நலிவு ஏற்பட்டதால் கடந்த இரண்டு நாட்களாக அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்நிலையில், நேற்று இரவு அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது.
 
எனவே, நாடெங்கும் பதற்றம் பரவியது. ஏராளமான திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை அருகே குவிந்தனர். கருணாநிதியின் குடும்பதினர்களான ஸ்டாலின், ராஜாத்தியம்மாள், கனிமொழி, உதயநிதி உள்ளிட்ட பலரும் மருத்துவமனைக்கு வந்தனர். இதனால், அங்கு இருந்த தொண்டர்களிடையே பதற்றம் நிலவியது.
 
ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை காரணமாக அவரது உடல் நிலை சீரானது என இரவு 11 மணிக்கு காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்த தகவலை முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவும் உறுதி செய்தார். 
 
இந்நிலையில் இன்று சேலத்தில் நடைபெறவிருந்த வேண்டிய அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கருணாநிதியை சந்திக்க நேற்று இரவு சேலத்திலிருந்து அவசரம் அவசரமாக சென்னை திரும்பினார்.
 
இதனையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து, கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.
 
பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நான், துணை முதல்வர், ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் கருணாநிதியை நேரில் சந்தித்தோம் என்றார். கலைஞர் நலமாக இருக்கிறார் என தெரிவித்தார்.