புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (21:40 IST)

உத்தரபிரதேசத்தை மிஞ்சிவிட்டது திராவிட மாடல்: சீமான்

seeman
உத்திரப்பிரதேசத்தையும் மிஞ்சிவிடும் அளவுக்கு ஆன்மிக திராவிட மாடல் ஆட்சி உள்ளது என சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 
 
சென்னையின் பூர்வீகக்குடிகளின் வாழ்விடங்களை இடித்துத் தகர்த்து மண்ணின் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஆவடியில் பசு மடம் கட்டுகிறது திராவிட மாடல் அரசு; இல்லை! ஆன்மிக திராவிட மாடல் அரசு. சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழர் மூதாதை நந்தன் உள்நுழைந்த தெற்கு நுழைவுவாயில் அடைக்கப்பட்டு, இன்றும் தீண்டாமைச்சுவர் இருக்கிறது எனக்கூறி, அதனை தகர்த்துவிட்டு, நந்தன் பெயரில் மணிமண்டபம் கட்டக் கோருகிறோம். இறந்துபோன கோயில் யானைகளுக்கு கோயில்களில் நினைவு மண்டபங்கள் கட்டுகிறது சமூக நீதி அரசு; இல்லை! மனுநீதி அரசு.
 
கோவையில் கடந்த ஐந்தாண்டில் மட்டும் 79 யானைகள் இறந்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. காடுகளிலுள்ள யானைகளின் இருப்புக்கோ, அவை செல்வதற்கான வழித்தடத்துக்கோ வழிவகை செய்யாத திமுக அரசு, கோயில் யானைகளுக்கு நினைவு மண்டபம் கட்டத் துடிப்பது வெட்கக்கேடானது. அரசின் பெயரில் கடன் வாங்கும் ரூ.90 ஆயிரம் கோடியில் தானே, பசுக்களுக்கு மடமும், யானைகளுக்கு நினைவு மண்டபமும் கட்டுகிறீர்கள்? சிறப்போ சிறப்பு. உத்திரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மிக திராவிட மாடல் ஆட்சி. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.