ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (07:10 IST)

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: உயிரை கொடுத்தாவது மீட்டெடுப்பேன்! டாக்டர் ராமதாஸ்..!

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள் என்றும், இன்னுயிரை ஈந்தேனும் இழந்த சமூக நீதியை மீட்டெடுப்பேன் என்றும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
திமுக அரசின் சமூக அநீதிக்கு நாளையுடன் வயது 900 நாட்கள். ஆம், தமிழகத்தில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டு, நாளையுடன் 900 நாட்கள் ஆகும் நிலையில், சமூக அநீதிக் கூடாரமாகத் திகழும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அந்தத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து வருகிறது. சமூகநீதி என்ற பசுத்தோலைப் போர்த்திக் கொண்டு திமுக அரசு காட்சியளித்தாலும், அது சமூக அநீதி என்ற புலி தான் என்பதை வன்னியர்களுக்கு இழைத்து வரும் துரோகத்தின் மூலம் மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகிறது.
 
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு போதிய பயன் கிடைக்கவில்லை என்று 31 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த நாம், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் நமக்கென தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி கடந்த 2020-ம் ஆண்டில் மிகப்பெரிய சமூக நீதி போராட்டங்களை முன்னெடுத்தோம். அதன் பயனாகவே முந்தைய ஆட்சியில், வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அந்த இட ஒதுக்கீடு செல்லாது என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்ட நிலையில், அதை எதிர்த்து நாம் தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 202-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் நாள் தீர்ப்பளித்தது. அதன்பின் இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
 
தமிழக அரசு நினைத்தால் இரண்டரை மாதங்களில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீட்டை வழங்கியிருக்க முடியும். ஆனால், இரண்டரை ஆண்டுகள் ஆகியும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இடைப்பட்ட காலத்தில், இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு 8 முறை கடிதங்கள் எழுதியிருக்கிறேன். பலமுறை தொலைபேசியில் உரையாடியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் எனக்கு அளித்த வாக்குறுதி, “வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்,” என்பதுதான்.
 
வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 3 முறை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார். பாமகவின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தலைமையிலான மூத்த நிர்வாகிகளும் கட்சித் தலைமையின் பிரதிநிதிகளாக அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் குறைந்தது 50 முறையாவது சந்தித்து பேசியிருப்பார்கள். அவர்களிடமும் இதே கருத்தைத் தான் தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், திடீரென ஒரு நாள் நாங்களாக இட ஒதுக்கீடு வழங்க முடியாது; மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் வன்னியர் இட ஒதுக்கீடு வழங்க முடியும் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார் என்றால், அதன் பொருள், உழைக்கும் பாட்டாளி மக்களை திமுக அரசு நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டது என்பது தானே?
 
வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் திமுக அரசு, ஒவ்வொரு கட்டத்திலும் நாடகங்களை மட்டுமே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதற்கு அடுத்த வாரமே வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான பணிகளைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், 7 மாதங்கள் கழித்து 2022-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தையே மாற்றி அமைத்தது. அப்போதும் கூட வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கான பணிகள் தொடங்கப்படவில்லை. மாறாக, 2023-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்து பரிந்துரை அளிக்க வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசு ஆணையிட்டது.
 
வன்னியர் இடஒதுக்கீடு குறித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டிய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், 20 மாதங்களாகியும் எதுவும் செய்யவில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்ட அமைப்பாக செயல்பட வேண்டிய தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், திமுக அரசின் சமூக அநீதி கூட்டாளியாகத் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய சமூக அநீதி சக்திகளையெல்லாம் எதிர்த்து தான் நாம் நமது சமூகநீதி போராட்டத்தை நடத்திச் செல்ல வேண்டியுள்ளது.
 
இத்தகைய துரோகங்களும், கழுத்தறுப்புகளும் நமக்கு ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களில் இத்தகைய சதிகளையெல்லாம் கடந்து தான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி 1980-ம் ஆண்டில் தொடங்கிய சமூகநீதிப் போராட்டத்தில் இத்தகைய துரோகங்களை ஏராளமாக சந்தித்திருக்கிறோம். சமூக நீதிக்காக பல கட்ட போராட்டங்களை நடத்தியும் நமது உரிமைக்குரலுக்கு தமிழக அரசு செவி சாய்க்காத நிலையில் தான், 1987-ம் ஆண்டு தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் நாளில் தொடங்கி ஒரு வாரத்துக்கு தொடர் சாலைமறியல் போராட்டத்தை அறிவித்திருந்தோம். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், மிகக் கொடிய தாக்குதல்களிலும் நமது பாட்டாளி சொந்தங்கள் 21 பேர் விலைமதிப்பற்ற இன்னுயிரை தியாகம் செய்தனர்.
 
அவர்கள் செய்த தியாகம் ஈடு இணையற்றது. அவர்களுக்குப் பிறகும் பலர் நமது சமூக நீதிப் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகம் என்ற உரம் தான் நமது சமூகநீதிப் போராட்டத்தை தழைக்க வைக்கிறது. அவர்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் அவர்களின் 37-ம் ஆண்டு நினைவு நாளில் போற்றுவதுடன், எனது வீர வணக்கங்களையும் செலுத்துகிறேன்.அவர்கள் எந்த நோக்கத்துக்காக தங்களின் இன்னுயிரை ஈந்தார்களோ, அந்த நோக்கம் இன்று வரை நிறைவேறவில்லை.
 
வன்னியர்களுக்கான சமூகநீதியை வென்றெடுக்க போராட்டம் தான் ஒரே தீர்வு என்றால், அதற்காக உங்களுடன் இணைந்து களமிறங்க நான் தயாராகவே இருக்கிறேன். உழைப்பையும், வழி நடத்தலையும் கடந்து, இன்னுயிரை ஈந்தால் தான் வன்னிய மக்களுக்கு சமூகநீதி சாத்தியமாகும் என்றால் அதற்கும் நான் தயாராகவே இருக்கிறேன். எப்படியிருந்தாலும் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்காமல் நான் ஓயமாட்டேன் என்று உறுதியளிக்கிறேன்.
 
எனவே, நமது சமூகநீதி இலக்கு குறித்த நம்பிக்கை மற்றும் உறுதிப்பாட்டுடன் நமது சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ம் நாளில் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்த வேண்டும்; அனைவரும் அவர்களின் வீட்டு முன்பு வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்ற பதாகையை அமைத்து குடும்பத்துடன் மரியாதை செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva