1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2017 (15:55 IST)

அம்ருதா வழக்கு ; டி.என்.ஏ சோதனை ஏன் செய்யக்கூடாது? - நீதிபதி கேள்வி

பெங்களூரை சேர்ந்த அம்ருதா தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதாவின் உடலை எடுத்து ஏன் டி.என்.ஏ சோதனை செய்யக்கூடாது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


 
பெங்களூரை சேர்ந்த அம்ருதா, தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரபரப்பை உண்டாக்கியுள்ளார். மேலும், அதே பெங்களூரில் வசிக்கும் ஜெ.வின் அத்தை மகளான லலிதா என்பவரும் அம்ருதா கூற்றில் உண்மையிருக்கிறது எனக்கூறி பரபரப்பிற்கு வலு சேர்த்துள்ளார். 
 
ஜெயலலிதாவிற்கும், நடிகர் சோபன்பாபுவிற்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான். என்னுடைய உறவினர்தான் ஜெ.விற்கு பிரசவம் பார்த்தார். இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என ஜெயலலிதா சத்தியம் வாங்கிக்கொண்டார்  என லலிதா கூறியிருந்தார்.
 
ஆனால், அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியிருந்தனர். அந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்ருதா வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஜெ.வின் உடலிலில் இருந்து டி.என்.ஏ சோதனை ஏன் செய்யக்கூடாது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ‘இப்படி விளம்பரத்திற்காக ஒருவர் வழக்கு தொடர்ந்திருக்கும் போது, டி.என்.ஏ சோதனை நடத்தினால், எதிர்காலத்தில் இது போல் ஆயிரம் பேர் வருவார்கள்’ எனக் கூறினார்.
 
அதைத்தொடர்ந்து, ஜெ. உயிரோடு இருக்கும் போது உரிமை கோராமல் இப்போது ஏன் வழக்கு தொடர்ந்தீர்கள் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.  டி.என்..ஏ சோதனைக்கு அனுமதித்தால் தமிழகத்தின் அமைதி பாதிக்கக்கூடாது என கூறிய நீதிபதி, டி.என்.ஏ சோதனை செய்ய உடல் ஒப்படைப்பு தொடர்பான மனுவை நாளை தாக்கல் செய்யும் படி வலியுறுத்தினார்.
 
அம்ருதா தொடர்ந்த வழக்கு சூடுபிடித்துள்ளதையடுத்து, இந்த விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.