திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (17:03 IST)

11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு ; மேல் முறையீடு செய்வோம் : திமுக அறிவிப்பு

துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானதை அடுத்து, மேல்முறை முறையீடு செய்வோம் என திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 
கொரடா உத்தரவை மீறி எதிர்த்து வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. கொறடா சக்கரபாணி ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 
 
இந்நிலையில், சபாநாயகரின் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும், சபாநாயகர் இதைத்தான் செய்ய வேண்டும் என உத்தரவிட முடியாது என கூறி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேரின் தகுதி நீக்க வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், திமுக தரப்பில் மேல் முறையீடு செய்யலாம் எனவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
 
இதுபற்றி  கருத்து தெரிவித்த திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் “ சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிட முடியாது என்றுதான் நீதிமன்றம் கூறியுள்ளது.  நீதிமன்றத்திற்கும் சட்டப்பேரவைக்கும் இடையே மோதல் வராமல் இருப்பதற்காகவே தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திமுக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
 
அதேபோல், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது பற்றி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என திமுக தரப்பு வழக்கறிஞர் சரவணன் நீதிமன்ற வளாகத்தில் தெரிவித்தார்.