Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2017 (22:37 IST)
ஓபிஎஸ் அணிக்கு பிரபல இயக்குனர் ஆதரவு
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிளவுபட்டு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது. இதில் சசிகலா அணிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கொடுத்து ஆட்சியை தக்க வைத்து கொண்டனர். இருப்பினும் மதில் மேல் பூனையாக ஆட்சி ஊசலாடி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஓபிஎஸ் அணிக்கு 11 எம்.எல்.ஏக்களும், 12 எம்பிக்கள் மட்டுமே ஆதரவு இருந்தாலும் கோடிக்கணக்கான அதிமுக தொண்டர்கள் ஓபிஎஸ் அணிக்கே ஆதரவு கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது திரையுலகினர்களும் ஓபிஎஸ் அணிக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே இயக்குனர் மனோபாலா உள்ளிட்ட ஒருசிலர் வெளிப்படையான ஆதரவையும், பலர் மறைமுக ஆதரவையும் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமாகிய ஆர்.சுந்தர்ராஜன் இன்று ஓபிஎஸ் அணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இயக்குனர் சுந்தர்ராஜனை தொடர்ந்து இன்னும் பல திரையுலகினர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு கொடுக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரம் கூறுகிறது.