திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 10 மே 2016 (12:45 IST)

தினமலர் ஏடு எங்களுக்கும் கருத்துக் கணிப்பிற்கும் சம்பந்தமில்லை என கூறியது - வைகோ

தினமலர் ஏட்டின் ஈரோடு, சேலம் பதிப்பு, இந்த கருத்துக் கணிப்பிற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என முதல் பக்கத்தில் விளம்பரமே வெளியிட்டது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
 

 
பெரியகுளம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஏ.லாசரை ஆதரித்து தேனியில் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய வைகோ, ”தேனி மாவட்டம் உள்ளடக்கிய மாவட்டங்களுக்கு மதுரையிலிருந்து பிரசுரமாகக்கூடிய தினமலர் நாளிதழ் கடந்த 4 நாட்களாக அநியாயமாக, அக்கிரமமான கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. ஜனநாயகப் பாலில் நஞ்சைக் கலக்கும் விதமாக கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.
 
தாது மணலில் 60 லட்சம் கோடி ரூபாய் வரை கொள்ளை நடந்திருக்கக்கூடும் என உலகமே அதிரும் விபரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் ஜெயலலிதாவுடன் பங்குதாரர்கள் போல் இருந்து அனைத்து தொகுதிகளிலும் செயல்பட்டார்கள். ஜெயலலிதாவிற்கு பங்கு தர மறுத்ததால் விரட்டப்பட்ட கூட்டம் இப்போது திமுகவுடன் சேர்ந்துள்ளது.
 
கனிமொழி, ஸ்டாலின், சபரீசன் ஆகியோர் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து கடந்த 10 மாதங்களாக நடுநிலை ஏடுகள் என சொல்லப்பட்ட அனைத்து ஏடுகளையும் விலைபேசி வாங்கிவிட்டு கருத்துக் கணிப்பு என்ற பெயரில், மக்கள் நலக் கூட்டணி ஜெயித்துவிடும் என்ற மக்களின் எண்ணத்தை மாற்றுவதற்காக - அதிமுக தோற்கும், விஜயகாந்த் தலைமையிலான அணி ஜெயிக்கும் என்ற நிலையை மாற்றுவதற்காக - இப்படி வெளியிட்டிருக்கிறார்கள்.
 
ஏப்ரல் 9ம் தேதி மக்கள் நலக் கூட்டணியோடு கேப்டன் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக இணைந்துவிட்ட செய்தி திமுகவை இடியெனத் தாக்கியது. தேமுதிக சேர்ந்த போது 20 சதவீத வாக்கு உறுதியாகிவிட்டதாக தினமலர் ஏடு, 8 கால செய்தி வெளியிட்டது. ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் இணைந்த பின்பு 28 சதவீதத்திற்கு குறையாமல் 30 சதவீதம் ஆகியிருக்க வேண்டும்.
 
இளைஞர்கள், மாணவர்கள், அலைபேசி புரட்சியாளர்கள் இம்முறை அதிமுக, திமுக வரக்கூடாது; இரு கட்சிகளிடையே சதவீதம்தான் வித்தியாசம்; ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றிபெற்றாலும் நாட்டை கொள்ளையடித்து விடுவார்கள் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
 
இந்நிலையில் தினமலர் ஏடு விசமப் பிரச்சாரம் செய்துவருகிறது. இதே தினமலர் ஏட்டின் ஈரோடு, சேலம் பதிப்பு, இந்த கருத்துக் கணிப்பிற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என முதல் பக்கத்தில் விளம்பரமே வெளியிட்டது. அதேபோல 13 மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி, வேலூர் பதிப்பும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என சொல்லிவிட்டது.
 
நெல்லைப் பதிப்பு இந்த அக்கிரமத்திற்கு துணைபோக மாட்டோம்என சொல்லிவிட்டது. எனவே ஒட்டுமொத்த தினமலரும் துணை போகவில்லை. தினமலர் ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மீது எனக்கு நம்பிக்கை உண்டு. பழங்கால நாணயத்தின் உண்மையை வெளி உலகிற்கு கொண்டு வந்தவர்.
 
ஆனால் அவர் மகன் இந்த கேட்டை செய்துள்ளார். நடுநிலையாளர்கள் மத்தியில் இப்போதுதான் திமுக, அதிமுக வேண்டாம் என்ற கருத்து வந்துள்ளது. அதனால்தான் தினமலர் வெளியிடும் கருத்துக் கணிப்பு பற்றி விளக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வரும் தேர்தலில் நமது அணி மகத்தான வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக விஜயகாந்த் வருவார்” என்று கூறியுள்ளார்.