இதை நீங்கள் செய்யாவிட்டால்? - முதல்வரை எச்சரிக்கும் தினகரன் ஆதரவாளர்கள்
அதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பை டிடிவி தினகரனே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரில், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட தினகரன், சமீபத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதன் பின் அவரை அதிமுக எம்.எல்.ஏக்கள் 34 பேர் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும், விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில அமைச்சர்களும் அவர் பக்கம் நிற்கின்றனர்.
அந்நிலையில், கடந்த 15ம் தேதி தினகரன் ஆதரவு 34 எம்.எல்.ஏக்களும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது, தினகரனின் அரசியல் மற்றும் கட்சி செயல்பாடுகளுக்கு யாரும் தடையாக இருக்கக் கூடாது, ஆட்சியை மட்டும் அமைச்சர்கள் பார்க்கட்டும், கட்சியை தினகரன் பார்த்துக்கொள்வார் என அவர்கள் முதல்வரிடம் வலியுறுத்தியதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், நேற்று மீண்டும் அந்த எம்.எல்.ஏக்கள், எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, அவர்கள் சார்பில் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது. உங்கள் ஆட்சியை அவர் கவிழ்க்க மாட்டார். ஆட்சியை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள். கட்சியை அவர் பார்த்துக்கொள்வார். கட்சியில் தினகரனுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கட்சி தொடர்பான நிகழ்ச்சிகள் அவர் தலைமையின் கீழ் நடக்க வேண்டும். அவர் தினமும் தலைமை செயலகத்துக்கு வருவார். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். மேலும், கட்சி பணியாற்ற அவரை நீங்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், இதற்கு நீங்கள் ஒத்துழைக்காவிட்டால், ஜனாதிபதி தேர்தலில் உங்கள் நிலைப்பாட்டிற்கு எதிராக நாங்கள் வாக்களிப்போம் என அவர்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தினகரன் மீண்டும் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்கிற கோரிக்கை, எடப்பாடி தரப்பிற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.