வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 29 ஜூலை 2016 (16:06 IST)

13 வயது சிறுமி சொல்வது பொய்யா? அமைச்சர் சொல்வது பொய்யா? - ஜி.ஆர். கேள்வி

அழுது கொண்டும், ஆற்றாமையோடும் அப்பெண்கள் விவரிக்கும் கொடுமைகளும், 13 வயது சிறுமி நடுக்கத்துடன் சொல்லும் வக்கிரமும் பொய் என்று அமைச்சர் சொல்லுகிறாரா? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

 
இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் பதிலளித்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன், ’கடமலைக்குண்டு பழங்குடி பெண்களிடம் வனத்துறை அதிகாரிகள் தவறாக நடந்ததாக கூறப்படுவது தவறு. வனச்சரக அலுவலக பொருட்களை பழங்குடி மக்கள் சேதப்படுத்தியதாகவும், அவர்கள் தாக்கியதில் வன ஆய்வாளர் சுபாஷ் காயம் அடைந்ததாகவும் அவர் கூறினார்.
 
மேலும், “மேகமலையில் எறும்பு தின்னிகள் கடத்தப்பட்டதாக புகார் வந்ததால் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதிகாரிகள் மீதான புகார் குறித்துகோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அதிகாரிகள் மலைவாழ் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்றும் விசாரணை மட்டுமே நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
பழங்குடியின பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் வனத்துறை அமைச்சரின் பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, பளியர் குடியிருப்பில் வசிக்கும் பழங்குடியின மக்கள் வனத்துறையினரால் துன்புறுத்தப்படவில்லை, பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்று வனத்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் கூறியது வன்மையான கண்டனத்துக்குரியது.
 
இந்த வாதம் உண்மையிலேயே ‘அந்த நாள்’ ஞாபகத்தை நெஞ்சிலே கொண்டு வந்தது. வருடம் 1992. அதே அதிமுக ஆட்சி, இதே முதலமைச்சர், வனத்துறை அமைச்சர் செங்கோட்டையன், பேசப்பட்டது வாச்சாத்தி கிராமம் அடித்து நொறுக்கப்பட்டு பழங்குடியின பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது குறித்து! அரசினால் சம்பவம் முழுதாக மறுக்கப்பட்டது. வாச்சாத்தி, மலை அடிவாரத்தில் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல், பெரியவர் நல்லசிவன் (சிபிஎம்-மின் அன்றைய மாநில செயலாளர்) மலை உச்சிக்கு சென்று கிராமத்தை எப்படி பார்வையிட்டிருக்க முடியும் என்று வரலாறும் தெரியாமல், பூகோளமும் தெரியாமல் செங்கோட்டையன் அன்று பேசியது நினைவுக்கு வருகிறது. அன்று பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தது செங்கொடி இயக்கம் தான். 19 வருட நெடிய போராட்டத்துக்குப் பிறகு வந்த நீதிமன்றத் தீர்ப்பு அரசின் பொய்யை அம்பலப்படுத்தியது.
 
நேரடியாகக் குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை கிடைத்ததே தவிர, அதை நியாயப்படுத்திய அரசுக்கு துரதிர்ஷ்டவசமாக தண்டனை எதுவும் இல்லை. இந்தப் பாதையையே இன்றைய வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பின்பற்றியிருக்கிறார்.
 
வனத்தை சூறையாடி கொள்ளையடிக்கும் ஒப்பந்தக்காரர்களையும், அதற்குத் துணை போகும் வனத்துறை அதிகாரிகளையும், ஆளும் கட்சி அரசியல்வாதிகளையும் பார்க்க முடியும். ஆனால் வனங்களை அழித்தொழிக்கும் பழங்குடியினத்தவரைப் பார்க்க முடியாது. வனங்களின் வாழ்க்கையும், மலைகளின் வாழ்க்கையும் பழங்குடியினத்தவரின் வாழ்வுரிமையுடன் ஒத்திசைந்தவை.
 
எனவே தான் வனங்களின் மீதான பழங்குடியின மக்களின் உரிமையை அங்கீகரிக்கும் சட்டமே வந்தது. இதைக் கொண்டு வந்ததில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு முக்கிய பங்குண்டு. வனத்தின் சிறு பொருட்களை சேகரித்து விற்பனை செய்யும் உரிமை சட்டப்படியே அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 
 
தமிழகத்தில் இச்சட்டம் இன்னும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவில்லை. அரசு தொடர்ந்து பாராமுகம் காட்டுகிறது. இப்பின்னணியில், கடந்த 16ம் தேதி கடமலைக்குண்டு, பகுதியின் பளியர் குடியிருப்பைச் சார்ந்த சில குடும்பங்கள் சிறு வனப்பொருட்களை சேகரித்துக் கொண்டு வரும் போது, வனத்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டிருக்கின்றனர்.
 
கண்ணியமான சோதனை குறித்து யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால், சோதனை என்ற பெயரால், மனித உரிமை முற்றிலும் மீறப்பட்டிருக்கிறது. 13 வயது சிறுமி உட்பட 6 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர். ஆண்களும் துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர். பணத்தையும், கைபேசியையும் கூட பறித்துக் கொண்டு விரட்டியடிக்கப்பட்ட இக்குடும்பங்கள் கை குழந்தைகளுடன் இரவு முழுதும் மலை பாதையில் நெடுந்தூரம் நடந்து வரும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். மறு நாள், வனத்துறை அலுவலகத்தில் இக்கொடுமையைத் தட்டிக் கேட்ட 5 ஆண்கள் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். தட்டிக் கேட்ட குற்றத்துக்கே சிறை என்றால், வனத்துறையினர் செய்த வன்கொடுமைக்கும், வக்கிரத்துக்கும் என்ன தண்டனை?.
 
செய்தி தெரிந்த உடனேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனநாயக மாதர் சங்கம், விவசாய சங்கம், மலைவாழ் மக்கள் சங்கம் ஆகிய அமைப்புகள் தலையிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உதவிகள் செய்யப்பட்டன. அவர்களின் சார்பில் உரிய முறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடந்தது என்ன?.
 
எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி புகார் கிடைத்த உடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில் பொறுப்பைத் தட்டிக்கழித்த குற்றத்துக்காக சம்பந்தப்பட்ட காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
16ம் தேதி நடந்த சம்பவத்துக்கு இதுவரை வனத்துறையினர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. வனத்துறை அமைச்சர் கவலைப்பட்டாரா? காவல்துறைக்குப் பொறுப்பாக உள்ள முதலமைச்சர் தலையிட்டாரா?
 
கோட்டாட்சியர் விசாரணையின்படி தவறு எதுவும் நடக்கவில்லை என அமைச்சர் அறிவித்திருக்கிறார். கோட்டாட்சியர் விசாரணை எப்படி நடந்தது? 
 
பாதிக்கப்பட்ட பெண்கள் எங்கள் அமைப்பினரிடம் விவரித்தனர். விசாரணை என்று சொல்லாமல் உணவு தருவதாகக் கூறி வரவழைத்து, அனைவரும் உள்ளே வந்தவுடன் அறையைப் பூட்டி வைத்துக் கொண்டு, மணிக்கணக்காக கோட்டாட்சியர் அச்சுறுத்தியுள்ளார். 
 
திரும்பத் திரும்ப நடந்த சம்பவம் என்ன என்று கேட்டு, அவர்களை சொல்லச் சொல்லி, இது பொய், உண்மை சொன்னால் தான் கைதான உங்கள் வீட்டு ஆண்கள் வெளியே வருவார்கள் என்று மிரட்டியிருக்கிறார். இங்கு நடந்தது எதையும் வெளியே சொல்லக் கூடாது என்று அச்சுறுத்தியதாகவும் பெண்கள் சொன்னார்கள். இந்தக் கேலிக்கூத்தான விசாரணையின் அடிப்படையில் தான் அமைச்சர், குற்றம் எதுவும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளார்.
 
வனத்துறைக்கு எதிராக உண்மை சொல்வதற்கே அஞ்சும் பழங்குடியின மக்கள், இவ்வளவு பெரிய குற்றச்சாட்டைப் பொய்யாக வைக்க முடியுமா? அழுது கொண்டும், ஆற்றாமையோடும் அப்பெண்கள் விவரிக்கும் கொடுமைகளும், 13 வயது சிறுமி நடுக்கத்துடன் சொல்லும் வக்கிரமும் பொய் என்று அமைச்சர் சொல்லுகிறாரா? தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்ற அரசின் உண்மைக்குப்புறம்பான கூற்றை உயிர்ப்பிக்க, இன்னும் எத்தனை நாட்களுக்கு நடக்கும் குற்றங்களை எல்லாம் மூடிமறைத்திடுவார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.