மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து காதில் பூ சுற்றி நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!
மதுரை அருகே உள்ள அவனியாபுரம் பேருந்து நிலையம் முன்பு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024- 2025 ஆம் நிதி ஆண்டுக்கான முழு மத்திய பட்ஜெட்டை கடந்த ஜூலை 23 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. மேலும், சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டு உள்ளது என, கடுமையாக விமர்சனம் செய்தனர். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டதைக் கண்டித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் காதில் பூ சுற்றி நூதன முறையில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கழகத்தின் பொதுச் செயலாளர் இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலாளர் விடுதலை சேகர் முன்னிலை வகித்தார். நிகழ்வில், திராவிட முன்னேற்றக் கழகம் மாமன்ற உறுப்பினர் கருப்பசாமி, இராஜேஷ், இந்திய தேசிய காங்கிரஸ் கஜேந்திரன், ம.தி.மு.க சார்பில் தொழிற்சங்க பிரதிநிதி மகபூ ஜான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் மாமன்ற உறுப்பினர் இன்குலாப், அண்ணா திராவிட மக்கள் கட்சி வழக்கறிஞர் பொன்குமரன், தமிழ்த் தேச மக்கள் முன்னணி பாண்டியன், புரட்சிகர இளைஞர் முன்னணி குமரன், மக்கள் அதிகாரம் இராமலிங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கருப்பு, ஆதித் தமிழர் சார்பில் செல்வம், தமிழ்த்தேச குடியரசு இயக்கம் மெய்யப்பன், மே 17 இயக்கம் விக்னேஷ், தந்தை பெரியார் நகர் வீரமணி, தமிழ்ப்பித்தன், ஸ்டாலின், பாலா மற்றும் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து, கோஷங்கள் எழுப்பினர்.