கள்ளச்சாராய வழக்கு..! தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி கைது..!!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சிவகுமார் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் பதுங்கியிருந்த போது போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ள மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இந்த பலகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே கள்ளச் சாராயம் விற்பனை செய்த கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் ஆகியோரும், மெத்தனால் விற்பனையாளர்களான சின்னதுரை, மதன், ஜோசப்ராஜ் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விஷச்சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான சிவகுமார், சென்னை எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த போது போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், விஷச் சாராயம் தயாரிக்க மெத்தனால் விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைதாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.