புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 8 மார்ச் 2020 (09:28 IST)

15 வயது சென்னை சிறுவனுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் சீனாவில் தொடங்கி படிப்படியாக அண்டை நாடுகளுக்கு பரவி வந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் பரவி விட்ட தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக தமிழகத்திற்கும் இந்த கொரோனா வைரஸ் பரவி விட்டது என்பது தமிழக மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி தான்
 
அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாகவும் இதனை அடுத்து அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
ஏற்கனவே ஓமன் நாட்டில் இருந்து தமிழகத்துக்கு வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு அந்த நபர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இந்த நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு அமெரிக்காவிலிருந்து வந்த பயணிகள் சோதனை செய்யப்பட்டனர். இந்த சோதனையின்போது 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
 
இந்த சிறுவன் நேரடியாக அமெரிக்காவிலிருந்து சென்னை வரவில்லை என்பதும் அமெரிக்காவிலிருந்து காத்தார் வந்து அங்கிருந்து சென்னை வந்திருப்பதாகவும் தெரிகிறது இதனை அடுத்து அந்த சிறுவன் தனிமைப்படுத்தப்பட்டு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அங்கு அந்த சிறுவனுக்கு கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
இதனை அடுத்து இந்த  சிறுவனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால் தமிழகத்தில் இரண்டாவது நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது