திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (14:43 IST)

கொரோனா வார்டிலிருந்து தப்பிய நபர்; மூச்சுத் திணறி பலி!

திருவண்ணாமலையில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையிலிருந்து தப்பிய சில மணி நேரத்திலேயே மூச்சு திணறி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு பலர் குணமடைந்தும் வருகின்றனர். திருவண்ணாமலையில் ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 6ம் தேதி அன்று அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன் தினம் திடீரென மாயமாகி உள்ளார். மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தேடியும் அவர் கிடைக்காததால் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை திருவண்ணாமலை பைபாஸ் சாலையில் நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மருத்துவமனையில் இருந்து தப்பித்த நபர்தான் அது என கண்டறிந்த போலீஸார் அவரது உடலை மீண்டும் மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர். மருத்துவமனையிலிருந்து தப்பித்து 3 கி.மீ தூரம் நடந்து சென்ற அவர் மூச்சு திணறலால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.