ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 8 செப்டம்பர் 2016 (03:38 IST)

தொடரும் விவசாயிகள் தற்கொலை! - வைகோ கவலை

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது மிகுந்த கவலையை அளிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருத்தம் தெரிவித்துள்ளார்.
 

 
இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில், ''மயிலாடுதுறை அருகே கடலங்குடி மேலத்தெருவைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ், வட்டிக்குக் கடன் வாங்கி ஒரு ஏக்கர் நிலத்தில் குறுவைப் பயிர் சாகுபடி செய்து இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையால் அறுவைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகிவிட்டன.
 
இதனால் மிகுந்த வருத்தமுற்ற செல்வராஜ் சேத்திரபாலபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மறு சாகுபடிக்கு கடன் கேட்டுள்ளார். அவர்கள் கடன் தர மறுத்துவிட்டதால் மனமுடைந்த செல்வராஜ் வயலுக்குச் சென்று பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி விட்டார். திருவாரூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்கின்ற வழியில் அவர் உயிர் இழந்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர்க்கடன் பெற முடியாத நிலைமைதான் தொடர்கிறது என்பதை மயிலாடுதுறை விவசாயி செல்வராஜ் தற்கொலை உணர்த்துகின்றது.
 
ஏற்கெனவே, தஞ்சை சோழகன்குடிக்காட்டைச் சேர்ந்த விவசாயி பாலன் தனியார் வங்கியிடம் கடன் வாங்கியதற்காக தாக்கப்பட்டார். அரியலூர் மாவட்டம் ஒரத்தூரைச் சேர்ந்ந்த விவசாயி அழகர், கும்பகோணம் விவசாயி தனசேகர், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகேயுள்ள இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் என தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது மிகுந்த கவலையை அளிக்கிறது.
 
எனவே, தமிழக அரசு விவசாயிகளின் நலனில் முழு அக்கறை செலுத்த வேண்டும். மயிலாடுதுறையில் கூட்டுறவு வங்கிக் கடன் கிடைக்காமல், தற்கொலை செய்து கொண்ட விவசாயி செல்வராஜ் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.