செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 26 ஜூலை 2015 (13:38 IST)

’ஹெல்மெட் அணிவதில் மக்களின் நடைமுறைச் சிரமங்கள் கருத்தில் கொள்ளப்படும்’ - நீதிபதி கருத்து

ஹெல்மெட் அணிவதில் பொதுமக்களுக்கு உள்ள நடைமுறை சிரமங்கள் கருத்தில் கொள்ளப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.
 

 
தமிழகத்தில் ஹெல்மெட் கட்டாய உத்தரவு கடந்த 1-ம் தேதி அமலுக்கு வந்தது. ‘ஹெல்மெட் கட்டாய உத்தரவால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். பெண்கள், குழந்தைகளுக்கு விலக்கு  அளித்து ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பலரும் முறையிட்டனர்.
 
இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் வாதாடுகையில், ”ஹெல்மெட் கட்டாயம் என்ற பொதுவான உத்தரவால், இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்து செல்வோர் என அனைவரையும் போலீஸார் பிடித்து துன்புறுத்துகின்றனர். பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
 
பின்னால் அமர்ந்து செல்லும் பெண்கள், குழந்தைகள், மெய்வழிச்சாலை சமூகத்தினர், சீக்கியர்களுக்கு விலக்கு அளித்து ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த அரசுக்கு அறிவுறுத்த வேண்டும். மிகவும் உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கும் விலக்கு அளிக்க வேண்டும்” என்றார். 
 
மேலும், வழக்கறிஞர் எம்.வேல்முருகன் அவர்கள் வாதாடுகையில், ”தமிழகத்தில் 1 கோடியே 55 லட்சத்து 95 ஆயிரத்து 140 இருசக்கர வாகனங்கள் உள்ளன. ஹெல்மெட் கட்டாயம் உத்தரவு குறுகிய காலத்தில் அமல்படுத்தப்பட்டதால், அதன் தேவை அதிகரித்துவிட்டது. அந்த அளவுக்கு சப்ளை இல்லை.
 
எனவே, ஹெல்மெட் கட்டாயம் உத்தரவை அமல்படுத்த காலநீட்டிப்பு வழங்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை போலீஸார் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுப் பேசினார்.
 
பின்னர் நீதிபதி என்.கிருபாகரன், “ஹெல்மெட் அணிவதில் பொதுமக்களுக்கு இருக்கும் நடைமுறைச் சிரமங்கள் கருத்தில் கொள்ளப்படும்’ என்று கூறிய நீதிபதி கிருபாகரன், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.