இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை?? – கடம்பூர் ராஜூ
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வாங்கி தர முதல்வர் முயற்சி செய்ய வாய்ப்பிருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை மசோதாவுக்கு நாடெங்கிலும் அதிருப்தி நிலவி வருகிறது. மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுகவினரையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சாடி வருகின்றனர். குடியுரிமை மசோதாவுக்கு கொடுத்த ஆதரவு உள்ளாட்சி தேர்தலில் பதம் பார்த்து விடுமோ என அதிமுக பதட்டத்தில் இருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது.
குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழர்கள் சேர்க்கப்படாதது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து பேசிய செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி குறித்து பேசினார். அப்போது இலங்கை தமிழர்கள் குடியுரிமை மசோதாவில் இடம்பெறாதது குறித்து கேட்கப்பட்டபோது, பிரதமரை சந்திக்கும் முதல்வர் பழனிசாமி இதுகுறித்து பேச இருப்பதாகவும், வாய்ப்பிருந்தால் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்றுத் தருவது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசினாலும் பேசுவார் என்றும் கூறியுள்ளார்.
அமைச்சர் இதை உறுதியாக சொல்லாவிட்டாலும் ஒரு ஊகத்தின் அடிப்படையிலேயே பேசியுள்ளார். ஆனால் ஒற்றை குடியுரிமைக்கே வாய்ப்பு வழங்காத மத்திய அரசு இரட்டை குடியுரிமை குறித்து யோசிப்பார்களா என்பது சந்தேகமே என அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.