சென்னை பல்கலை பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்போம்.. அரசுக்கு ஆசிரியர்கள் கடிதம்..!
சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க திட்டமிட்டிருப்பதாக, பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்கள் அரசு அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளன. தங்களுடைய 8 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், விழாவில் பங்கேற்க மாட்டோம் என்று எச்சரித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயற்குழுக் கூட்டத்தில், சென்னையில் செப்டம்பர் 13-ஆம் தேதி இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனை உயர் கல்வித் துறை செயலருக்கு அறிவிக்கும் விதமாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் எடுத்த முக்கிய தீர்மானங்கள்:
சென்னை பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட 22 பேராசிரியர்களின் நியமனம் தொடர்பாக, உயர்நீதிமன்றத்தின் ஆணையின் படி விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் தொடர்புடைய பேராசிரியர்கள், முடிவெடுக்கும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு விசாரணை முடியும் வரை பதவியில் இருந்து விலக வேண்டும்.
ஆசிரியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழுவின் நிலுவைத் தொகை செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் வழங்கப்படாவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்படும்.
ஏற்கனவே பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் பட்டமளிப்பு விழா நிகழ்வுகளை ஆசிரியர்கள் அலுவலர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தீர்மானம் ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் 166 பட்டமளிப்பு விழா செப்டம்பர் மாத இறுதியில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva