காணாமல் போன மகள்; அலட்சியம் செய்த போலீஸ்! – தந்தை எடுத்த அதிர்ச்சி முடிவு!
சென்னையில் காணாமல் போன மகளை கண்டுபிடிப்பதில் போலீஸார் மெத்தனம் காட்டியதால் காவல் நிலையம் முன்பே தந்தை தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தாம்பரம் அருகே உள்ள காமராஜபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு ரம்யா என்ற மனைவியும் 10 வயது மகனும், 13 வயது மகளும் உள்ளனர். இருவரும் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 3ம் தேதி காலையில் மகளை வீட்டில் காணததால் தந்தை சீனிவாசன் பல இடங்களில் தேடியுள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவர் யுவராஜுடன் சிறுமி அடிக்கடி பேசி வந்தது தெரிய வந்துள்ளது.
யுவராஜூம் வீட்டிலிருந்து மாயமானதால் யுவராஜ்தான் தனது மகளை ஆசை வார்த்தை காட்டி அழைத்து சென்றிருக்க வேண்டும் என சீனிவாசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்து 3 நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து இன்று காவல் நிலையத்தில் சீனிவாசன் முறையிட்டதற்கு போலீஸார் அவரை இழிவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் உடன் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி கொண்டு காவல் நிலையம் முன்பே தீக்குளித்துள்ளார் சீனிவாசன்.
அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே அவர் மீது தண்ணீர் ஊற்றி அணைத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 80 சதவீத தீக்காயங்களோடு சீனிவாசன் அவசர சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது மகளை கண்டுபிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.