வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2020 (10:25 IST)

சொந்த கடையிலேயே கை வைத்த உரிமையாளர் மகன்! – 14 கிலோ தங்கம் சிக்கியது!

சென்னை சௌகார்பேட்டையில் தங்க வியாபாரியின் கடையில் கிலோ கணக்கில் தங்கம் திருடப்பட்ட விவகாரத்தில் உரிமையாளரின் மகனே தங்கத்தை திருடியது தெரிய வந்துள்ளது.

சென்னை சௌகார்பேட்டை பகுதியில் நகைகள் செய்து விற்பனை செய்து வரும் நகைக்கடை ஒன்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. தங்க நகைகளை சொந்தமாக டிசைன் செய்து சிறு வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வரும் இந்த கடை வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே செயல்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 25ம் தேதி நகைகள் விற்பனை செய்யப்பட்டு பூட்டப்பட்ட பின்னர் கடையை திறந்திருக்கிறார்கள். லாக்கரை திறந்தபோது அதிலிருந்து தங்க நகைகள் மாயமானதை கண்டு கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். கதவு மற்றும் லாக்கர்களை உடைக்காமல் கொள்ளை சம்பவம் அரங்கேறியிருப்பதால் நகை கடை தொடர்புடையவர்களே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகித்த போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் கடை உரிமையாளர் சுபாஷ் போத்ராவின் மகன் ஹரீஷ் போத்ரா திருட்டு சாவிகளை பயன்படுத்தி லாக்கரை கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக ஹரீஸ் போத்ராவை கைது செய்துள்ள போலீஸார் 14 கிலோ தங்கத்தை அவரிடமிருந்து மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.