அடம்பிடித்த அப்பாவு; இக்கட்டிலிருந்து வெளியேறுவாரா இன்பதுரை? – நாளை வாக்கு எண்ணிக்கை
ராதாபுரம் தொகுதி வாக்குகள் மறு எண்ணிக்கையை நாளைக்கு தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் மிக சொற்பமான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை பின்னுக்கு தள்ளி எம்.எல்.ஏ ஆனார். இந்நிலையில் ராதாபுரம் தொகுதியின் எண்ணப்படாத தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என அப்பாவு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
மறுவாக்கு எண்ணிக்கையை தடை செய்ய வேண்டும் என இன்பதுரையும் மனு தாக்கல் செய்தார். அப்பாவுவின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் தபால் வாக்குகளை எண்ணும் பணியை நாளை காலை 11.30 மணிக்கு தொடங்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தனது மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என இன்பதுரை வேண்டுகோள் விடுத்தார். அதை தள்ளுபடி செய்த நீதிமன்றம் பட்டியலில் வரும்போது விசாரணை மேற்கொள்ளப்படும் என மறுத்துள்ளது.
மறுவாக்கு எண்ணிக்கையில் சொற்ப வாக்குகளில் அப்பாவு வெற்றிபெறவும் வாய்ப்புகள் இருப்பதால் அரசியல் கட்சிகளிடையே பதட்ட நிலை நிலவுகிறது. இன்பதுரை தன் பதவியை தக்க வைத்து கொள்வாரா? அல்லது மறுவாக்கு எண்ணிக்கைக்கு அடம்பிடித்த அப்பாவு பதவியை பெறுவாரா? என்பது நாளைய வாக்கு எண்ணிக்கையில் தெரிய வரும்.