1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 27 மார்ச் 2017 (13:15 IST)

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுத்தே தீருவோம்: மீண்டும் தீவிரமடையும் போராட்டம்!

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுத்தே தீருவோம்: மீண்டும் தீவிரமடையும் போராட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சில வாரங்களுக்கு முன்னர் அந்த சுற்றுவட்டாரத்தை உள்ள மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

 
இந்த போராட்டத்துக்கு தமிழகம் முழுவதும் மக்கள் ஆதரவு அளித்தனர். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னர் இந்த நெடுவாசல் போராட்டமும் பிரபலமாக பேசப்பட்டது. இதனையடுத்து மத்திய, மாநில அரசுகளின் கவனம் இந்த போராட்டத்தின் மீது திரும்பியது.
 
நெடுவாசல் மக்கள் விரும்பவில்லை என்றால் இந்த திட்டம் கைவிடப்படும் என மத்திய அரசு வாக்குறுதி அளித்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிட வைத்தது. இந்நிலையில் நெடுவாசல், காரைக்கால் உள்ளிட்ட 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு இன்று ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
 
இதனையடுத்து நெடுவாசலில் மக்கள் போரட்டம் மீண்டும் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. பலரும் நெடுவாசல் நோக்கி குவிந்தவாறு உள்ளனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஒப்பந்தம் கையெழுத்து ஆவதால் திட்டம் நிறைவேறும் என்ற அச்சம் வேண்டாம். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து என்ற செய்தியை வைத்து யாரும் குழப்பமடைய வேண்டாம் எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ருந்தார்.
 
இந்நிலையில் இன்று மத்திய பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு 27 பொதுத் துறை நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து அதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளது. அதன்படி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஜெம் நிறுவன அதிகாரிகள் டெல்லி தாஜ் மான்சிங் ஹோட்டலுக்கு வந்துள்ளனர்.
 
இதனையடுத்து நெடுவாசல் மக்களின் ஐயத்தை தீர்த்த பின்னர் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. திட்டம் கைவிடப்படும் நோக்கம் இல்லை, எப்படியாவது நிறைவேற்றப்படும் என்று உறுதிபட மத்திய அரசு கூறியுள்ளதால் மீண்டும் நெடுவாசல் போராட்டக்களமாக உள்ளது.