செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 28 நவம்பர் 2015 (18:46 IST)

இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு - டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு வரும் டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
 

 
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதை தொடர்ந்து, ஜெயலலிதா தனது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவிகளை இழந்தார். பின்பு, சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அவரை பெங்களூர் உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.
 
இதனையடுத்து, அவர் சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். தமிழக முதல்வராகவும் பதவி ஏற்றார்.
 
இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதை எதிர்த்து, சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டிராபிக் ராமசாமி சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
அதில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றிப் பெற்றது செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
 
அதேபோன்று சுயேட்சையாக வேட்பாளராக மனுதாக்கல் செய்த டி.சுரேஷ் என்பவரும் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ’நான் ஜூன் 8ஆம் தேதி சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்தேன்.
 
அந்த மனு, சரிவர முன்மொழியப்படவில்லை என்று கூறி, ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி அதை நிராகரித்தார். வேட்பு மனு தாக்கலின்போது அனைத்து விதிமுறைகளையும் நான் முறையாகப் பின்பற்றி இருந்தேன்.
 
எனவே, வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது முறையற்றது, சட்டவிரோதம் என்றும் இத்தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றது செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
 
இம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், முதல்வர் ஜெயலலிதா, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி உள்ளிட்ட 31 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.
 
இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தபோது, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் பதில் மனுதாக்கல் செய்ய கால அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணையை டிசம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.