வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 14 பிப்ரவரி 2019 (11:37 IST)

கேப்டனின் சென்னை வருகை – புத்துணர்ச்சிப் பெறுமா தேமுதிக?

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் நாளை மறுநாள் சென்னை திரும்ப இருக்கிறார் என்று அக்கட்சியின் சார்பில் செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது.

2011-2016 ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி, தமிழக வாக்காளர்களில் 10 சதவீதம் பேரைக் கைவசம் வைத்திருந்தது, தேர்தலுக்கு தேர்தல் வாக்கௌ சதவீதத்தை உயர்த்தியது, கூட்டணிக்காக திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் என அனைத்துக் கட்சிகளும் காத்திருக்க வைத்தது, 2016 ஆம் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்குத் தலைமை தாங்கியது  என தமிழக அரசியலி தேமுதிக கடந்த காலங்களில் முடியாத கட்சியாக இருந்து வந்தது.. ஆனால் அவை எல்லாமே இப்போது கடந்த காலமாக மாறிவிட்டன.

2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், 100 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டும் ஒருத் தொகுதியில் கூட வெல்ல முடியாமல் தேமுதிக தனது முதல் வீழ்ச்சியை சந்தித்தது. அதன் பிறகு கட்சித் தலைவர் விஜயகாந்தின் உடல் நலக் குறைவு, கட்சி அதிகாரங்கள் அனைத்து விஜயகாந்திடம் இருந்து அவரது மனைவி மற்றும் மைத்துனரிடம் கைமாறியது எனத் தேமுதிக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. மேலும் விஜயகாந்த் அரசியல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் பல மாதங்கள் ஆகின்றன. கேப்டனுக்குப் பதிலாக அவரது மகன் சண்முகப்பாண்டியன் தேர்தல் மேடைகளில் இப்போது நிறுத்தப்படுகிறார். ஆனால் கேப்டன் அளவுக்கு அவரது மகனுக்கு மக்களிடம் ஆதரவுக் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
இந்த சூழ்நிலையில்தான் இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக தலைமையிலான மெகாக் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் இணைந்துள்ளன. மறுபக்கம் அதிமுக, பாஜக மற்றும் பாமக இணைந்த ஒரு கூட்டணி உருவாவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அதிமுக கூட்டணியில்தான் தேமுதிக சேர்வதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. மேலும் தேமுதிக துணை செயலாளர் எல் கே சுதீஷ் அமித் ஷாவோடு தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கேப்டன் சென்ன திரும்பியதும் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தனது கட்சியைப் புத்துருவாக்கம் செய்துகொள்ள இருக்கும் ஒரே வழி இந்த நாடாளுமன்றத் தேர்தல்தான். வரிசையாக அதிமுக தலைவர் ஜெயலலிதா மறைவு மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு எனத் தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் ஒன்று உருவாகியுள்ளது. இந்த வெற்றிடத்தைப் பயன்படுத்திக்கொள்ள ரஜினி, கமல், பாஜக, காங்கிரஸ் என அனைத்துக்கட்சிகளும் போட்டிப் போட்டு வேலை செய்துகொண்டு வருகின்றன. ஆனால ஜெயலலிதா மற்றும் கலைஞர் உயிரோடு இருந்த போதே அரசியலில் களமிறங்கி இரண்டுக் கட்சிகளுக்கு மாற்றுக்கட்சியாக உருவாகி வந்த தேமுதிக சமீபகாலமாக அரசியலில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தாமல் உள்ளது.

இந்நிலையில் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து நாளை மறுநாள் சென்னைத் திரும்பவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்கட்சியின் சார்பில் வெளிவந்துள்ளது. இதனையடுத்து விஜயகாந்த் வந்தவுடன் கூட்டணிக் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னாவது கட்சி மீண்டும் பழையபடி தீவிர அரசியலில் புத்துணர்ச்சி அடையவேண்டும் என்பதே கட்சி தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் தொண்டர்களின் அபிலாஷை.