திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2024 (11:49 IST)

மூளைச்சாவு அடைந்த சென்னை இளைஞர்.. 7 பேருக்கு கிடைத்த உடல் உறுப்பு தானம்..!

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால் 7 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப் பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ் என்ற 18 வயது இளைஞர்  ஜவுளி நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் செப்டம்பர் 15-ம் தேதி, ஆந்திர மாநிலம் நகரியில் நடந்த சாலை விபத்தில் சுரேஷ் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், அவர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பல்வேறு துறைகளில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் மூளைச்சாவு அடைந்தார்.இதனையடுத்து  உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது தந்தை மற்றும் சகோதரிகள் முன்வந்தனர்.

மறைந்த இளைஞரின் இதயம், இதய வால்வு, நுரையீரல், இரு சிறுநீரகங்கள், கால் எலும்பு, கல்லீரல் மற்றும் கண்கள் உட்பட பல உறுப்புகள் தானமாக பெறப்பட்டு, அதில், இதயம், கால் எலும்பு, ஒரு சிறுநீரகம் உள்ளிட்டவை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டன. மற்ற உறுப்புகள் தகுதியின் அடிப்படையில் பிற மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன.

உடல் உறுப்புகளை தானமாக அளித்து, பலருக்கு வாழ்வு அளித்த சுரேஷின் உடலுக்கு, மருத்துவமனை வளாகத்தில் அணிவகுப்பு மரியாதை செய்யப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

Edited by Mahendran