திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 8 பிப்ரவரி 2024 (15:52 IST)

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பீதியில் மக்கள்! - தனிப்படை அமைத்த காவல்துறை

bomb threat
சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.
 
எந்தெந்த பள்ளிகளுக்கு மிரட்டல்:
 
சென்னையில் 17 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.  சென்னை கோபாலபுரம் டிஏவி ஆண், பெண்கள் பள்ளி, சென்னை திருமழிசை, முகப்பேர், அண்ணாநகரில் உள்ள சென்னை பப்ளிக் பள்ளி,  பாரிமுனையில் உள்ள செயிண்ட் மேரீஸ் பள்ளி, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பவன்ஸ் வித்யாஸ்ரம், ஆர்.ஏ.புரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரம் எழும்பூர், பெரம்பூர், பூந்தமல்லியில் உள்ள சனா ஸ்மார்ட் பள்ளி கே.கே.நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி உள்ளிட்ட பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 
 
தனியார் பள்ளிகளுக்கு இன்று காலை சுமார் 11 மணியளவில், பள்ளி நிர்வாக அலுவலகத்தின் இமெயிலுக்கு வந்த செய்தியில், உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும்,  இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.  இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், இந்த மெயில் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 
 
பள்ளிகளில் குவிந்த பெற்றோர்கள்:
 
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து பள்ளிகளில் இருந்து தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்லுமாறு பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  பின்னர் பள்ளிகளில் இருந்து தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பீதி அடைய வேண்டாம்:
 
வெடிகுண்டு மிரட்டல் புரளி என்றும், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதால் பெற்றோர்கள் பீதி அடைய வேண்டாம் என்று காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிரட்டல் மெயில் அனுப்பிய நபர்கள் குறித்து விசாரணையை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 
 
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை:
 
சென்னையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை வரவைத்து தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
பள்ளிகளில் உள்ள அறைகள், வளாகம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
தனிப்படை அமைப்பு:
 
வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.  சைபர் கிரைம் தனிப்படையும் அமைக்கப்பட்டு காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்த விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.
 
காவல்துறை விளக்கம்:
 
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி தான் என்று இமெயிலில் மிரட்டல் விடுத்தவரை தேடி வருகிறோம் என்றும் கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த்  தெரிவித்துள்ளார்.

 
சென்னையில் ஒரே நேரத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், பெற்றோர்கள் பள்ளிகளில் திரண்டதால் சென்னை மாநகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது