40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணிக்கு வெற்றி உறுதி: அண்ணாமலை கருத்து
அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் என்ற நடை பயணத்தை சமீபத்தில் தொடங்கிய அண்ணாமலை நேற்று சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவர் பழைய பேருந்து நிலையம், ஐந்து விளக்கு, பெரியார் சிலை வழியாக நூறடி சாலையை நடந்தார்.
அந்த பகுதியில் உள்ள மக்கள் முன் அவர் பேசிய போது தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணிக்கு மக்கள் வெற்றியை தருவார்கள் என்ற நம்பிக்கையை தனக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும் இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் ஒவ்வொருவரும் தலையிலும் 3.52 லட்சம் கடன் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மகளிர் உரிமை தொகையாக ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு மது கடைகள் மூலம் 50000 கோடி திமுகவினர் கொள்ளையடிக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு திமுக அமைச்சர் பொன்முடி வாயை திறப்பதே இல்லை என்றும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோபம் பெண்கள் மத்தியில் உள்ளதை நடைப்பயணத்தின் போது தான் அறிந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Edited by Mahendran