திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (15:46 IST)

ரிசார்ட்டிலிருந்த எம்.எல்.ஏ சுந்தர்ராஜ் மிஸ்ஸிங் - தினகரன் அதிர்ச்சி

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களில் ஒருவராக இருந்த ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சுந்தர்ராஜ் ரிசார்ட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
தன்னையும், சசிகலாவையும் அதிமுகவிலிருந்து ஒதுக்கி வைக்கும் முயற்சியில் ஒன்றிணைந்த அதிமுக அணி இறங்கியுள்ளதால், அதிருப்தியடைந்த தினகரன்  தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏக்கள் 20 பேரை பாண்டிச்சேரி சின்னவீராம் பட்டினத்தில் உள்ள விண்ட் ஃபிளவர் ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளார். 
 
எடப்பாடி தரப்பிலிருந்து சில எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு போயிருக்கிறது. அதேபோல், எடப்பாடி அணியில் இருக்கும் சில எம்.எல்.ஏக்களுக்கு, தினகரன் தரப்பில் இருந்து அழைப்பு போயிருக்கிறது. இப்படி இருபுறமும் எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே, விடுதியில் தங்கியிருக்கும் சில எம்.எல்.ஏக்கள் அணி மாறுவது குறித்து யோசித்து வருவதாக செய்திகள் வெளிவந்தது.


 

 
அதோடு, தொடர்ந்து விடுதியிலேயே தங்கியிருப்பது சிலருக்கு மன உளைச்சலையும், சோர்வையும் ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. சில பேர் வெளியே செல்ல வேண்டும் எனவும், சிலர் வீட்டிற்கு செல்ல வேண்டும் எனவும் கூறிவருவதாக தெரிகிறது.
 
இந்நிலையில், ஒட்டபிடாரம் எம்.எல்.ஏ சுந்தர்ராஜ் இன்று காலை அங்கிருந்து தனது காரில் சென்னை நோக்கி கிளம்பிவிட்டாராம். எங்கே செல்கிறீர்கள்? என செய்தியாளர் கேட்டதற்கு தினகரனை சந்திக்க செல்கிறேன் என்று மட்டும் கூறிவிட்டு அவர் சென்றுள்ளார். 
 
ஆனால், அவர் உண்மையிலேயே தினகரனை சந்திக்கத்தான் சென்றாரா அல்லது வேறு காரணங்களுக்காக வெளியே சென்றாரா என்பது மர்மமாகவே இருக்கிறது.