வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (14:27 IST)

கூட்டத்தை நிராகரித்த எம்.எல்.ஏக்கள் - அதிர்ச்சியில் முதல்வர்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் 104 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டது தெரியவந்துள்ளது.


 

 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் கடந்த மாதம் 28ம் தேதி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் சில தினகரனுக்கு எதிராக சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  
 
அந்த கூட்டத்திற்கு அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்கள், எம்.பிக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 33 எம்.எல்.ஏக்கள், 35 அமைச்சர்கள் என மொத்தம் 68 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 44 பேர் கலந்து கொள்ளவில்லை. எனவே, அவர்கள் தினகரன் பக்கம் இருக்கிறார்களா என்ற சந்தேகம் அப்போதே பலருக்கும் ஏற்பட்டது.
 
மேலும், எடப்பாடி பக்கம் தங்களின் ஸ்லீப்பர் செல் இருக்கிறார்கள் எனவும், தங்கள் பக்கம் 40 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் என திவாகரன் மற்றும் தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ ஆகியோர் தொடர்ந்து கூறிவந்தனர். 
 
அந்நிலையில், தன்னுடைய ஆதரவை தெரிந்துகொள்ள, கடந்த ஆகஸ்டு 31ம் தேதி மாவட்ட ரீதியாக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை முதல்வர் எடப்பாடி தனது வீட்டில் சந்தித்து உரையாடினார். அதில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்கிற விபரம் எதுவும் வெளியாகவில்லை.
 
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று வருமாறு அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்புவிடப்பட்டது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 21 பேருக்கும் தொலைப்பேசியில் அழைப்பு விடுக்கப்பட்டது. 
 
இந்நிலையில், இந்த கூட்டத்தில் மொத்தம் 104 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என செய்திகள் வெளிவந்துள்ளது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் இந்த கூட்டத்தை நிராகரித்தனர். 
 
அதேபோல், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏக்களில் எங்கள் ஆதரவு எம்.எல்.ஏக்களும் இருக்கிறார்கள் என தினகரன் தரப்பு கொளித்திப் போட்டுள்ளது. இது எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.