1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (11:58 IST)

அடையாறில் கார் விபத்து ; போதையில் மட்டையான நடிகர் ஜெய், பிரேம்ஜி

மது போதையில் கார் விபத்தை ஏற்படுத்திய நடிகர் ஜெய்யின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

 
சுப்பிரமணிய புரம், கோவா, ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஜெய். இவரும், இயக்குனர் வெங்கட்பிரபுவின் தம்பியும், நடிகருமான பிரேம்ஜியும் நேற்று இரவு ஒரு விருந்து நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டு அங்கு மது அருந்தியுள்ளனர். 
 
அதன் பின் ஜெய்யின் ஆடி காரில் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். காரை ஜெய் ஓட்டியுள்ளார். அவர்களின் கார் அடையாறு மலர் மருத்துவமனை அருகே பாலத்தின் கீழே சென்ற போது கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரின் மீது மோதி நின்றுவிட்டது.
 
இதைக் கண்ட பொதுமக்கள், காருக்குள் பார்த்த போது, ஜெய்யும், பிரேம்ஜியும் மது போதையில் மயங்கிக் கிடந்தனர். இதையடுத்து, போக்குவரத்து போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.
 
இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் ஜெய்யையும், பிரேம்ஜியையும் தட்டி எழுப்பி அடையாறு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.  
 
அதைத்தொடர்ந்து குடிபோதையில் காரை செலுத்தி விபத்து ஏற்படுத்தியதற்காக ஜெய்யின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு, அவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும் படி, அடையாறு போக்குவரத்து அலுவலருக்கு சென்னை போக்குவரத்து காவலதுறை பரிந்துரை செய்துள்ளது.
 
நடிகர் ஜெய் இதற்கு முன்பே மதுபோதையில் காரை செலுத்தி, சில முறை போலீசாரிடம் சிக்கியுள்ளார். அப்போதெல்லாம் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். தற்போது மேலும், மேலும் அதே தவறை அவர் செய்து வருவதால், அவரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட இருக்கிறது.