1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (17:40 IST)

நடிகர் சங்கம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் - சிஐடி சகுந்தலா

நடிகர் சங்கம் ஒற்றுமையுடன் செயல்பட்டால், எதையும் சாதிக்க முடியும் என நடிகை சி.ஐ.டி. சகுந்தலா கூறியுள்ளார்.
 

 
ஈரோட்டில், கவிதாலயம் இசை பயிற்சி பள்ளி சார்பில், நடிகை சி.ஐ.டி. சகுந்தலாவுக்கு 'வாழ் நாள் சாதனையாளர் விருது' வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சகுந்தலா, ”சேலம், அரிசிபாளையம் பகுதிதான், எனது சொந்த ஊர். சிறு வயதிலேயே சென்னையில் லலிதா - பத்மினி - ராகிணி நடன நிகழ்ச்சியில் சேர்ந்து, நடனம் கற்றுக் கொண்டேன். அதன் பிறகு படிப்படியாக சினிமாத்துறைக்குள் நுழைந்தேன்.
 
சிவாஜி, எம்.ஜி.ஆர்., படங்களில் நடித்துள்ளேன். இதுவரை அனைத்து மொழிகளிலும், 600க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். நடிகர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருக்கிறேன். தற்போது நடிகர் சங்கம் இரு அணிகளாக செயல்படுகிறது.
 
என்னை பொறுத்தவரை, இரு அணிகளாக இருந்தால் சிறு நடிகர், நடிகை மட்டுமின்றி, பெரிய நடிகர்களும் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். நடிகர் சங்கம் ஒற்றுமையுடன் செயல்பட்டால், எதையும் சாதிக்க முடியும். பேதம் பார்த்து செயல்பட கூடாது.
 
இரு அணிகளிலும் இருப்பவர்கள் நல்லவர்கள் தான். நான், எந்த கட்சியும் சேர்ந்தவள் இல்லை. முந்தைய கால படத்தில் தெளிவான கதைகளும், பாடல்களும் இருந்தது. நவீன தொழில் நுட்பங்கள் புகுந்ததால் கதைக்கு யாரும் முக்கியத்துவம் அளிப்பதில்லை” என்றார்.