பாஜகவில் இருந்து விலகினார் ஆர்.கே.சுரேஷ்.. ஐஜேகே கட்சியில் முக்கிய பதவி..!
தமிழ் திரை உலகின் நடிகர் தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷ் கடந்த சில வருடங்களாக பாரதிய ஜனதா கட்சி இருந்த நிலையில் நேற்று திடீரென அவர் இந்திய ஜனநாயக கட்சிகளில் இணைந்தார். அவருக்கு அந்த கட்சியில் முக்கிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக ஆர்கே சுரேஷ் கருதப்பட்ட நிலையில் ஆருத்ரா கோல்டு நிறுவனம் முறைகேடு வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தனக்கு பாஜகவில் முக்கியத்துவம் இல்லை என்று அதிருப்தியில் ஆர் கே சுரேஷ் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் திடீரென அவர் அந்த கட்சியில் இருந்து விலகினார். இதனை அடுத்து அவர் இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்த நிலையில் அவருக்கு அகில இந்திய அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளதாக அந்த கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து அறிவித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் தான் இந்திய ஜனநாயக கட்சி இருந்தது என்பதும் தற்போதும் அதே கூட்டணியில் தான் அக்கட்சி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran