1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , புதன், 19 ஜூன் 2024 (17:35 IST)

பாதாள சாக்கடையின் மேல் மூடிகள் இல்லாமல் திறந்த நிலையில் இருந்ததால் பெண் குழிக்குள் விழுந்து விபத்து!

கோவை மாநகரில் பிரதான பகுதிகளில் ஒன்று காந்திபுரம். இங்கு ஏராளமான வணிக நிறுவனங்கள், நகைக் கடைகள், வீட்டு உபயோக மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் விற்பனையகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் காந்திபுரம் பகுதி எப்போதும் மக்கள் நடமாட்டம், போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
 
காந்திபுரம் நூறடி சாலையில் இருபுறமும் அமைந்து உள்ள கடைகளின் முன்புறமும் பாதாள சாக்கடை  அமைக்கப்பட்டு உள்ளது. 
 
சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் பாதாள சாக்கடை தூர்வாரப்பட்டது. ஆனால், தூர்வார திறக்கப்பட்ட பாதாள சாக்கடை மீண்டும் மூடப்படவில்லை.
 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்து எச்சரித்து உள்ளனர். ஆனால் அந்த புகாரின் பேரில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அஜாக்கிரதையாக இருந்து உள்ளனர்.
 
இதன் இடையே அவ்வழியாக நடந்து சென்ற இளம் பெண் ஒருவர் திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழியை கவனிக்காமல் திடீரென குழிக்குள் விழுந்தார். இதனால் அந்த பெண்ணுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. 
 
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள், அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
தற்போது அப்பெண் சாக்கடை குழிக்குள் விழும் சி.சி.டி.வி காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 
 
இது தொடர்பான செய்தி வெளியானதும், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு டோஸ்விட்டு, உடனடியாக திறந்து கிடந்த பாதாள சாக்கடை குழிகளை  மூட உத்தரவிட்டார்.
 
அதன்பேரில், குழிகள் தற்போது மூடப்பட்டன. மாநகரின் பல்வேறு பகுதிகளில் இதே போன்று சாக்கடைக் குழிகள் மூடப்படாமலும் சரிவர சுகாதார பணிகள் மேற் கொள்ளப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.