கோவில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிக்கு ஒரு வாரம் டிராஃபிக் பணி செய்ய நூதன தண்டனை...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சி.இடையபட்டியில் அமைந்துள்ள சிவன் கோவிலில் கடந்த மாதம் 24 ஆம் தேதி கோவிலின் உண்டியலை உடைத்து அதில் இருந்த 3 ஆயிரம் ரூபாய் திருடு போனதாக கோவில் நிர்வாகி விஜய் அளித்த புகாரின் அடிப்படையில், உத்தப்பநாயக்கணூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உசிலம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரை கைது செய்து உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண் 2 ன் நீதிபதி சத்தியநாராயணனிடம் ஆஜர் படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
15 நாள் நீதிமன்ற காவலுக்கு பின் இந்த வழக்கு மீது விசாரணை நடத்திய உசிலம்பட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண் 2 - ன் நீதிபதி சத்தியநாராயணன், குற்றவாளியான ஆறுமுகத்திற்கு ஒரு வாரம் உசிலம்பட்டி நகர் பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் டிராஃபிக் பணி செய்ய வேண்டும் என நூதன தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
அதன்படி உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு உசிலம்பட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் அருள்சேகர், சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஆனந்த் முன்னிலையில் ஆறுமுகம் தனது முதல்நாள் பணியை போக்குவரத்து உடை அணிந்து செய்த சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்தது.