புயல், வெள்ளத்தால் இழந்த சான்றிதழ்களின் நகல்களை பெற இணையதளம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு
புயல் வெள்ளத்தால் கல்லூரி மாணவர்கள் தங்களது சான்றிதழ்களை இழந்து இருந்தால் அவர்களுக்கு நகல் கிடைக்க புதிய இணையதளம் உருவாக்கப்பட்டிருப்பதாக உயர் கல்வித் துறை அறிவித்துள்ளது.
சமீபத்தில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் புயல் காரணமாக பெய்த கன மழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் பல முக்கிய ஆவணங்கள் அழிந்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கல்லூரி மாணவ மாணவிகள் தங்களது சான்றிதழ்களை இழந்திருந்தால் அவர்களுக்கு கட்டணம் இன்றி நகல்களைப் பெற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர் கல்வித் துறை கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, மழை, வெள்ள பாதிப்பினால், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகச் சான்றிதழ்களை இழந்த மாணவ / மாணவிகள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களை கட்டணமின்றி பெறுவதற்கு ஏதுவாக www.mycertificates.in என்ற இணையதளம் உயர்கல்வி துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவ மாணவிகள் தங்களின் இழந்த சான்றிதழ் பற்றிய விபரங்களை மேற்கண்ட இணையதள வாயிலாக இன்றிலிருந்து பதிவு செய்யலாம்.
மாணவ / மாணவிகள் மேற்கண்ட இணையதள வாயிலாக சான்றிதழ்களின் விபரங்களை பதிவு செய்தபின் அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை (Acknowledgement) அனுப்பப்படும்.அவ்வாறு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்டு, மாணவர்களுக்கு சென்னையில் வழங்கப்படும். மேலும், இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவுபெற தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800–425–0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.”
Edited by Siva