1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 13 நவம்பர் 2022 (10:38 IST)

’பரிசுப்பொருள் வேணுமா? வாங்கிக்கோ!’; காதலனை ஆள் விட்டு அடித்த காதலி!

கன்னியாக்குமரியில் முன்னாள் காதலனை கூலிப்படையை ஏவி தாக்கிய காதலியை போலீஸார் தேடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர் ப்ரவீன். வெல்டராக பணிபுரியும் இவருக்கும் அணைக்கரை பகுதியை சேர்ந்த ஜெஸ்லின் என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

அதை தொடர்ந்து ப்ரவீன் தனது குடும்பத்தோடு சென்று ஜெஸ்லினை பெண் கேட்க ஜெஸ்லின் வீட்டிலும் ஒப்புக் கொண்டு 2 ஆண்டுகள் கழித்து திருமணத்தை நடத்தலாம் என முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில்தான் இவர்களது காதலில் புது விரிசல் ஏற்பட்டுள்ளது. சில நாட்களாக ஜெஸ்லின் ப்ரவீனிடம் சரியாக பேசாமல் இருந்துள்ளார்.


இதுகுறித்து ப்ரவீன் தனது காதலி ஜெஸ்லினை கண்காணித்ததில் அவர் பக்கத்து வீட்டில் உள்ள ஜெனித் என்ற டிரைவருடன் பழகுவதும், அடிக்கடி பைக்கில் வெளியே சென்று வருவதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கேட்டதால் ப்ரவீன், ஜெஸ்லின் இடையே தகராறு ஏற்பட்டதுடன், ஜெஸ்லின் தான் டிரைவரான ஜெனித்தை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். இதனால் தான் வாங்கி கொடுத்த பரிசுப்பொருட்களை திரும்ப தருமாறு ப்ரவீன் கேட்டுள்ளார்.

பரிசுப்பொருட்களை தருவதாக வேர்கிளம்பி பகுதிக்கு ப்ரவீனை வர சொன்ன ஜெஸ்லின் அங்கு தனது தற்போதைய காதலர் ஜெனித் மற்றும் சில கூலி படை ஆட்களுடன் ப்ரவீனை சுற்றி வளைத்து தாக்கியுள்ளார். இதுகுறித்து ப்ரவீன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவான ஜெனித் – ஜெஸ்லின் காதல் ஜோடியை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காதலியே கூலியாட்களை ஏவி காதலனை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K