புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (09:20 IST)

10 அடி குழிக்குள் விழுந்த சிறுமியை புத்திசாலித்தனமாக மீட்ட இளைஞர்கள்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை அடுத்துள்ள சின்னபாபு சமுத்திரம் என்ற கிராமத்தில், சரோஜா என்பவர் வீடு கட்டி வருகிறார். இதற்காக பில்லர் அமைக்க சுமார் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டிய நிலையில் மறுநாள் அதில் வேலை நடைபெறவிருப்பதால் அந்த பள்ளம் மூடப்படாமல் இருந்துள்ளது.
 
இந்த நிலையில் 4 வயது சிறுமி ஒருவர் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென அந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக விழுந்துவிட்டார். புதுச்சேரியை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் 4 வயது சிறுமி கோபிணி, குழிக்குள் தவறி விழுந்ததை அந்த பகுதியில் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்க அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் முயற்சி செய்தனர். 
 
ஆனால் அந்த பள்ளம் மிகவும் குறுகியதாக இருந்ததால் உள்ளே இறங்கி மீட்க முடியாத நிலை இருந்தது.  இதனையடுத்து பொக்லைன் இயந்திரத்தை வரவழைத்த இளைஞர்கள் அந்த பள்ளத்தின் அருகே மற்றொரு குழியை வெட்டி, அதனுள் இறங்கி சிறுமியை பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பான வீடியோவை இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.